புத்தரும் அவரது தம்மமும் நூலுக்கு வெளியிடப்படாத முன்னுரை

எலியனார் செலியட் அவர்களால் வழங்கப்பட்டு கொலம்பியா பல்கலைக் கழகம் வெளியிட்ட அசல் முகவுரை   இணையக் கட்டுரை ஆங்கிலத்தில்

                                                            தமிழில்  பேரா.முனைவர்.. கணேசன்.                                                                                                   கொட்டாரம்   

    நான் எப்படி இவ்வளவு கல்வியில் உயர்ந்த அளவு பட்டங்களைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது? என்ற கேளவி எப்போதும் என்னிடம் கேட்கப்படுகிறது. நான் ஏன் பௌத்தத்தை தழுவினேன்? என்ற இன்னொரு கேள்வியும் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்விகள் வைக்கப்படுகின்ற காரணம் என்னவெனில் இந்தியாவில் தீண்டத்தகாதோர் என்று அறியப்படுகிற சாதியில் நான் பிறந்தேன் என்பதற்காகத்தான்.  இதில் முதல் கேள்விக்கு இந்த முகவுரையில் பதிலளிப்பதற்கு இடமில்லை. ஆனால் இரண்டாம் கேள்விக்கான பதிலை இந்த  அளிக்க வேண்டிய இந்த முகவுரைதான்.

       புத்தருடைய தம்மத்தை மிகச் சிறந்தது என நான் மதிக்கிறேன் என்பது இரண்டாம் கேள்விக்கான நேரடியான பதிலாகும். எந்த மதத்தையும் இந்த மதத்தோடு ஒப்பிட முடியாது. அறிவியல் அறிந்த ஒரு நவீன மனதருக்கு ஒரு மதம் தேவைப்படுமானால், அது பௌத்த மதமாக மட்டுமே இருக்க முடியும். முப்பத்தைந்து வருடங்களாக அனைத்து மதங்களையும் ஆய்வு செய்த பிறகு என்னிடம் இந்த நம்பிக்கை வளர்ந்தது.

       எப்படி பௌத்தத்தை ஆய்வு செய்தேன் என்பது இன்னொரு கதை. இது வாசகனுக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும். இது எப்படி நிகழ்ந்தது? எனது தந்தை ஒரு இராணுவ அதிகாரி. அதே சமயத்தில் மதத்தில் மிக அதிகப் பற்றாளர். என்னை மிகக் கடுமையான கட்டுப்பாட்டுடன் வளர்த்தார். இளம் வயதிலிருந்தே எனது தந்தையின் மத வாழ்க்கையில் சில முரண்பாடுகளைக் கண்டேன. அவருடைய தந்தை ஒரு ராம பக்தராக இருந்த போதிலும், எனது தந்தை ஒரு கபீர்தாசரின் பக்தர். அவர் விக்ரக வழிபாட்டை நம்புவராக இல்லாதிருந்தாலும் கணபதி பூஜையை எங்களுடைய பாதுகாப்புக்காகச் செய்தார். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அவர் கபீர்பந்த்  நூல்களைப் படித்தவர். அதே சமயத்தில் ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப்போகும் முன்பு என்னையும் என் மூத்த சகோதரரையும் மகாபாரதத்தின் ஒரு பகுதியை வாசிக்கக் கட்டாயப்படுத்துவார். எனது தந்தையின் வீட்டில் கூடுகின்ற எனது சகோதரிகள் மற்றும் நபர்களிடம் ராமாயணக் கதை சொல்வதைக் கேட்கச் சொல்லுவார். இந்நிகழ்வுகள் பல வருடங்களாகப் போய்க் கொண்டிருந்தன.

       நான் ஆங்கில நான்காம் நிலைத் (பத்தாம் வகுப்பு) தேர்வில் தேர்ச்சி அடைந்தபோது  எனது சாதி மக்கள் என்னைப் பாராட்டி ஊக்குவிக்க ஒரு பொதுக்கூட்டம் நடத்த விரும்பினர். பிற வகுப்பு (சாதி)  மாணவர்களின் கல்வி நிலையை ஒப்பிடும்போது இம்மாதிரிக் கல்வியில் தேர்ச்சி பெறுவது அரிதான நிகழ்வு ஆனதால் பாராட்டுக்குரியது என்று கருதினர். ஆனால் விழா ஒருங்கிணைப்பாளர்கள் என்னுடைய சமூகத்தில் நான் முதன்முதலாக இந்த உயர்ந்த நிலையில் படித்து வந்துள்ளதாகக் கருதினர். இந்தப் பாராட்டு விழாவை நடத்துவதற்கு எனது தந்தையிடம் விழாக் குழுவினர் அனுமதி கேட்கச் சென்றனர்.  “அவன் தேர்வில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளான். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை, இது போன்ற  பாராட்டு விழா பையனின் தலைக் கணத்தை உருவாக்கும்  என்று கூறி  ஒரேயடியாக மறுத்துவிட்டார். பாராட்டு விழா நடத்த விரும்பியவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.  அவர்களுக்கு வழி கிடைக்க வில்லை. எனது தந்தையின் நெருங்கிய நண்பரான இலக்கிய கர்த்தா கெலுஸ்கரிடம் தந்தையை ஏற்கும்படி சொல்லுங்கள் என்று சிபாரிசு செய்தார்கள். இலக்கிய கர்த்தா கெலுஸ்கரும் ஏற்றுக்கொண்டார்.  சிறிய விவாதத்திற்குப் பிறகு இலக்கிய கர்த்தா கெலுஸ்கரின் வேண்டுகோளை  எனது தந்தை ஏற்றுக்கொண்டார். பாராட்டுக் கூட்டம் இலக்கிய கர்த்தா கெலுஸ்கர் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரை முடித்த பிறகு பரோடா மன்னர் சாயாஜிராவ் ஓரியண்டல் தொடருக்காக தான் எழுதிய புத்தரின் வாழ்க்கை நூல் பிரதியை எனக்குப் பரிசாக வழங்கினார். அந்த நூலை மிக ஆவலோடு படித்தேன். மிகப் பெரிய அளவில் எனை ஈர்த்தது. அதனால்  நான் இயக்கப்பட்டேன். எனத தந்தை ஏன் பௌத்த இலக்கியத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதைக் கேட்கத் தொடங்கினேன். அதன் பிறகு எனது தந்தையிடம் கேட்கத் தீர்மானித்தேன். பிராமணர்கள்  சத்திரியர்கள்  ஆகியோரைப்  பெருமையாகப் போற்றுகின்ற, சூத்திரர்களையம் தீண்டத்தகாதவர்களையும் தரக்குறைவாக வெளிப்படுத்தும் தொடர்களை வெளிப்படுத்துகின்ற மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் படிப்பதை ஏன் எங்களுக்கு வலியுறுத்தினீர்கள்? என என் தந்தையிடம் கேட்டேன். எனது தந்தை இந்தக் கேள்வியை விரும்பவில்லை. இது போன்ற சில்லரைத் தனமான கேள்விகளைக் கேட்கக் கூடாது, நீங்கள் சிறு பையன்கள்  உங்களுக்குச் சொல்லப்படுகின்றவைகளை மட்டும்  செய்ய வேண்டும் எனச் சாதாரணமாகச் சொல்லி விட்டார்.  எனது தந்தை குழந்தைகள் மீது மிகவும் கண்டிப்பு மிக்கவர். நான் குழந்தைப் பருவமாக இருக்கும் போது எனது தாயார் இறந்து விட்டார். அதன் பிறகு எனது சிற்றன்னை கவனிப்பில் இருந்ததால் என் தந்தையிடம் சுதந்திரத்தை நான் மட்டும் பெற்றுக் கொள்வேன்.

       சிறித காலத்திற்குப் பிறகு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். இந்த முறை எனக்குக் கூறுவதற்குப் பதிலை ஆதார பூர்வமாக அவர் தயாரித்து வைத்திருந்தார். “நான் உங்களுக்கு மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் ஏன் படிக்கச் சொன்னேன் என்பதற்குக் காரணம் இதுதான்; நாம் தீண்டத்தகாதவர் வகுப்பைச் சார்ந்தோர்களாக இருப்பதால் உனக்குத் தாழ்வு மனப்பாண்மை அதிகமாக இருக்கக் கூடுமென்பது இயல்பானதுதான். மகாபாரதம் மற்றும் ராமாயணம் தாழ்வு மனப்பான்மையை நீக்குவனவாக அமைந்திருக்கின்றன. துரியோதணனும், கர்ணனும் சிறிய மனிதர்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு மதிப்புயர்ந்தவர்களாக ஆனார்கள் பார்த்தியா?. வால்மீகியைப் பார். அவர் கோலி வகுப்பைச் சார்ந்தவர் ராமாயணத்தின் படைப்பாசிரியராக உருவானார். இது தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் தன்மை இருப்பதால்தான் உங்களை மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் படிக்கக் கேட்டுக் கொண்டேன்” என்று பதிலை விளக்கினார்.

       எனது தந்தையின் விவாதத்தில் சில வலிந்து கூறும் தன்மை இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் நான் விளக்கத்தில் திருப்தி அடையவில்லை. மகாபாரதத்தில் எந்த பாத்திரத்தையும் நான் விரும்பவில்லை என்பதை என் தந்தையிடம் சொன்னேன். பீஷ்மரையும், துரோணரையும், கிருஷ்ணனையும் நான் விரும்பவில்லை. பீஷ்மரும் துரோணரும் நயவஞ்சகர்கள். அவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றாகவும் இருந்தது. கிருஷ்ணன் மோசடி செய்வதில் நம்பிக்கை கொண்டவர். அவரின் வாழ்க்கை மோசடிகளின் தொடர்களே தவிர வேறொன்றும் இல்லை. அவரைப் போலவே ராமனையும் வெறுக்கிறேன்.  சூர்ப்பணகைத் தொடர், வாலி சுக்ரீவன் தொடர், சீதாவுடனான மிருகத்தனமான நடவடிக்கை ஆகியவற்றில் அவரின் நடத்தையைக் கூர்ந்து நோக்கினால் தெரியும். என்று தந்தையிடம் நான் கூறினேன்.  எனது தந்தை பதிலேதும் கூறாமல் அமைதியானார். ஏதோ என்னிடம் ஒரு கலக மனப்போக்கு உள்ளது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

      இலக்கியவாதி கெலுஸ்கர் எனக்குப் பரிசாக வழங்கிய நூலின் உதவியால் நான் பௌத்தத்திற்குத் திரும்பியது எப்படி என்பதற்குப் பதில் இதுதான். நான் இளம் வயதில் பௌத்தத்திற்குச் சென்றது என்பது காலிச் சிந்தனையோடு அல்ல. பௌத்தத்தை வாசித்த பின்னணியில் எப்போதும் எதையும் ஒப்பீடூ செய்வதம் முரண்படுவதுமான (விமர்சனப் பார்வையில்) செயலைச் செய்ய முடிந்தது. இதுதான் புத்தரும் அவரது தம்மத்தில் ஆர்வம் ஏற்பட்டதின் அடிப்படைக் காரணமாகும்.

     புத்தரும் அவரது தம்மமும் நூல் எழுதுவதற்கு வேறு மூலக்காரணம் உள்ளது. 1951ல் கொல்கத்தாவை மையப்படுத்தி வெளிவந்த  மகாபோதி சங்கத்தின்  இதழின் ஆசிரியர் வைஷாக் எண் குறித்த கட்டுரையை எழுதுமாறு என்னைக் கேட்டார். அந்தக் கட்டுரையில் அறிவியல் பாதையில் விழிப்படைந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் மதம் புத்தமதம் மட்டுமே என்பதை விவரித்தேன். அது இல்லாமல் சமூகம் அழியும். நவீன உலகத்திற்கு பௌத்தம் மட்டுமே நவீனத்துவத்தைப் பாதுகாக்கும் எனபதையும் குறிப்பிட்டேன். அந்த பௌத்தம் மிகப் பரந்த அளவு இலக்கியத்தைக் கொண்டதாகவும் முழுமையாக அதனைப் படிக்க யாராலும்  முடியாத காரணத்தாலும் பௌத்தம் மிகவும் மெதுவான வளர்ச்சிதான் அடைகிறது. கிறிஸ்தவர்கள் வைத்திருக்கின்ற பைபிளப் போல பௌத்தத்திற்கென்று மறைநூல் இல்லாமல்  இருப்பது பிகப்பெரிய குறைபாடாகும் என்பதையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கட்டுரையை அவர்களின் இதழில் வெளியிட்டனர், கட்டுரையைப் படித்தபிறகு, பலர் இந்த நூலை எழுதுங்கள் என்று  கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமும் வேண்டுதல்கள் வந்து கொண்டிருந்தன. அந்த வேண்டுதல்களின் விளைவுதான் இந்த ”புத்தரும் அவரது தம்மமும்” என்ற நூல்.

       அனைத்து விமர்சனங்களையும் தவிர்ப்பதற்காக இந்த நூல் மூல நூல் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பல்வேறு தொகுக்கப்பட்ட நூல்களிலிருந்து ஒன்றிணைத்து தொகுப்பட்ட நூல்தான் இது. இன்னும் குறிப்பாக எவராலும் புறந்தள்ள முடியாத கவிதை நூலான அஷ்வகோஷின்  ”புத்தவிதா”நூலிலிருந்தும் எடுத்துக் கொண்டேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். சில கருத்துகளை விளக்குகையில் அவருடைய மொழியிலிருந்துகூட உளவாங்கியிருக்கிறேன்.

     சரியான தலைப்புகளை வெளிப்படுத்துவதற்காகத் தெளிவாகவும் எளிமையாகவும் வடிவமைத்து அறிமுகப்படுத்த முயற்சி செய்துள்ளேன். பௌத்த மாணவர்களுக்கு சில கருத்துகள் கடினமானதாக இருக்கவும் கூடும். இதை அறிமுகப் பகுதியில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.    

    எனக்குத் துணையாக இருந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சுச் செய்த சக்குள்ளி கிராமத்து (அம்பேத்கரின் உதவியாளர்) நானக் சந்த் ரட்டு, ஹோசியாப்பூர் மாவட்டம், நங்கள் கர்டு கிராமம் திரு பர்காஷ் சந்த் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை ஒழுங்கமைத்து வெளிக்கொணரத்  தனது உடல்நலத்தையும் பாராமலும், எவ்விதப் பணப் பயனையும் எதிர்பாராமல்  பெரிய பணியைத் தன் தோளில் சுமந்து செய்து முடித்த நானக் சந்து ரட்டு, அவர்களும் பர்காஷ் சந்து இருவருமே என்மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம்தான் அவர்கள் நிறைவேற்றிய பணி என்பதை நன்றியோடு நினைக்கிறேன்.

 இந்த நூலை தொகுக்கும் பொறுப்பை எடுத்தபோது நான் சுகவீனமாக இருந்தேன். இப்போதும் சுகவீனமாகத்தான் உள்ளேன். கடந்த ஐந்தாண்டுகளாக எனது உடல்நிலையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ”சுடர்” மறையும் நிலையில் உள்ளது என மருத்துவர்கள் கூறும் அளவு சில தருணங்களில் அபாய நிலையில் இருந்தேன். எனது இணையர் டாக்டர் சவிதாவாலும் டாக்டர் மல்வாங்கர் இருவரின் மருத்துவத் திறமையால் மறையும் சுடரை வெற்றிகரமாகத் தூண்டிவிடப்பட்டிருக்கிறேன். இந்தப் பணி முழுமையடைய இருவர் மட்டுமே எனக்கு உதவி புரிந்தார்கள். திரு எம் பி சிட்னிஸ் இந்த நூலை சிறப்புக் கவனம் எடுத்து பிரதி பிழைத் திருத்தம் செய்து  செப்பனிட்டார். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   மூன்று புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் .பௌத்தத்தைப் பற்றி சரியான கோணத்தில் புரிந்து கொள்வதற்காக மீதி இரண்டு நூல்களான ஒன்று புத்தரும் காரல் மார்க்ஸூம், இரண்டு பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் ஆகிய நூல்களும் எழுதப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் வெளியிடப்படும் என் நம்புகிறேன்.

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

26, அலிப்பூர் ரோடு, டெல்கி

6- 04- 1956

(Unpublished Preface To “The Buddha and His Dhamma”

(Originally published on the Columbia University website (Text provided by Eleanor Zelliot as prepared by Vasant Moon)

 

     

 

     

     

Comments

Popular posts from this blog

கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி அய்யன்காளி

நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் ஆர் பி மோரே டாக்டர் பி ஆர் அம்பேத்கர்